பழ கண்காட்சி ரத்து சிம்ஸ் பூங்கா மூடல்
குன்னுார்; மழை காரணமாக, குன்னுாரில், பழ கண்காட்சி ரத்து செய்யப்பட்டு, பூங்கா நேற்று மூடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் நிறைவு பெறுவதற்கு முன்பு, தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது. இந்நிலையில், மழை தீவிரமடைந்ததால், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.இந்நிலையில், குன்னுாரில் மழையின் தாக்கம் சற்று குறைவாக உள்ள போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லேம்ஸ்ராக் காட்சி முனை நேற்று முன்தினமே மூடப்பட்டது. டால்பின் நோஸ் மற்றும் அதிக மரங்கள் நிறைந்த சிம்ஸ்பூங்கா நேற்று மூடப்பட்டது. 3 நாட்கள் பழக் கண்காட்சி நடந்து வந்த நிலையில், நேற்று நடப்பதாக இருந்த பரிசளிப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது. இதே போல காட்டேரி பூங்காவும் மூடப்பட்டுள்ளது. பூங்கா மற்றும் சுற்றுலா மையங்கள், சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.