மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
குன்னுார்; குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில், 'மைக்ரோலேண்ட்' அறக்கட்டளை சார்பில், தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ், ஜான் ஆகியோர் ஒருங்கிணைப்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்ட, உள் நோயாளிகள் பிரிவு பெண்கள் வார்டு திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா திறந்து வைத்து பேசுகையில், ''சுகாதார துறையில் மாநில அளவிலான ரேங்க் அளிப்பதில் முதலிடம் பெற்ற, நுாற்றாண்டு பழமை வாய்ந்த குன்னுார் அரசு லாலி மருத்துவமனை, பல உட் கட்டமைப்புகளில் சிறந்து விளங்குகிறது. குறுகிய காலத்தில் தன்னார்வலர்களின் இந்த அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. சிறப்பு பெற்ற இந்த மருத்துவமனையை இங்கு பணியாற்றும் அனைவரும் பராமரிப்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்வது அவசியம். அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் குன்னுார் சிறந்து விளங்குகிறது. இதில், கழிவு மேலாண்மை திட்டத்தில் 'கிளீன் குன்னுார்' அமைப்பின் அற்புதமான பணிகள் மற்ற உள்ளாட்சிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது,'' என்றார்.அறக்கட்டளை அறங்காவலர் கல்பனா கோர் பேசுகையில், ''வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை சார்பில், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த மருத்துவமனையில், தரமான சுகாதார சேவையின் சவால்களை கருத்தில் கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார். தன்னார்வலர் சார்லஸ் பேசுகையில்,''நீலகிரியில் இருந்து கோவைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இங்கு, 3 பிரிவுகளில் டயாலிசிஸ் யூனிட் நிறுவப்பட்டது. உயிர் காக்கும் சிகிச்சை அளித்து, நேரம், செலவு குறைக்கப்பட்டது. மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவு புதுப்பிக்கப்பட்டதால், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை, 200 லிருந்து 500ஆக உயர்ந்துள்ளது. சேவை மதிப்பீடில், 2.5 ஸ்டார் நிலை, 4.5 என உயர்ந்துள்ளது.தற்போது, மகளிர் வார்டின் காற்றோட்ட வசதி, ஒளியமைப்பு, கூரை தகடு, ஜன்னல், மின்சார அமைப்பு நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கட்டில்கள், மேம்படுத்தப்பட்ட நவீன கழிப்பறை, சுடுநீர் வசதி, செவிலியர் ஓய்வறை உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன,''என்றார்.
மருத்துவமனைகளின் இணை இயக்குனர் ராஜசேகரன் கூறுகையில், ''இந்த பணிகளை போன்று, ஆண்கள் வார்டு உட்பட மற்ற பணிகளும் மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். நீதிமன்ற வழக்கு காரணமாக இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.
18-Mar-2025