உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செடிகள் சூழ்ந்து காணப்படும் அரசு குடியிருப்புகள் நடவடிக்கை அவசியம்!

செடிகள் சூழ்ந்து காணப்படும் அரசு குடியிருப்புகள் நடவடிக்கை அவசியம்!

ஊட்டி : ஊட்டி ராஜ்பவன் அருகே, பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ் துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் சிதிலமடைந்திருப்பதால், அரசு ஊழியர்கள் மழை காலங்களில் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.ஊட்டி ராஜ்பவன் அருகே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்பில் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், 35 குடும்பங்களாக குடியிருந்து வருகின்றனர். போலீஸ் துறைக்கு சொந்தமான குடியிருப்பில், 10 குடும்பங்கள் உள்ளனர். பழமையான இந்த குடியிருப்புகளை போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் பராமரிக்காமல் விட்டதால் குடியிருப்புகள் அவல நிலையில் உள்ளன.

என்னென்ன அவலங்கள்

அங்குள்ள, பழமை வாய்ந்த, 45 குடியிருப்புகளை சம்மந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு, 3 கி.மீ., தொலைவில் உள்ள ராஜ்பவன் சோலைக்கு வன விலங்கு தொல்லைக்கு இடையே, சென்று ஊற்று நீரை எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். குடியிருப்புகளை புதர் சூழ்ந்ததால் விஷ ஜந்துக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.சிறுத்தை, கரடி, காட்டெருமை தொல்லையால் இரவு பணிக்கு சென்று திரும்பும் போலீசார், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வெளியே வரும் மக்கள் பீதியுடன் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நடைப்பாதைகள் ஆங்காங்கே உடைந்துள்ளன. ஓட்டு வீட்டின் மேற்கூரை ஆங்காங்கே உடைந்திருப்பதால் மழை சமயத்தில் ஒழுகி வருகிறது.குடியிருப்பு வாசிகள் கூறுகையில், 'ஒரு சில அரசு ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.தற்போது, இங்குள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் என்பது அறவே இல்லை. குடியிருப்புகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழை காலத்தில் எந்நேரத்தில் என்னாகுமோ என்ற அச்சத்திலேயே குடியிருந்து வருகிறோம். மாவட்டநிர்வாக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj Bala
ஆக 29, 2024 16:03

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிரபார்ப்பது முறையல்ல? அது அரசாங்கம் கொடுத்த வீடாக இருந்தால் என்ன? அவரவர் வீட்டுக்கு முன்னும் பின்னும் வீட்டில் குடி இருப்பவர்களே செடி கொடிகளை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால் என்ன?


அப்புசாமி
ஆக 29, 2024 06:52

தமிழனுக்கும், இந்தியனுக்கும் சுத்த உணர்ச்சியோ, அழகுணர்ச்சியோ கிடையாது. வீட்டுக்குள் சாமான்கள் அடைச்சது போறாதுன்னு வெளிலே வேற கொட்டி வெச்சிருப்பான். கேட்டா இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம்னு அடிச்சி உடுவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை