உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இழுபறிக்கு பின் அரசு பள்ளி நிலத்தை மீட்கும் பணி துவக்கம்

இழுபறிக்கு பின் அரசு பள்ளி நிலத்தை மீட்கும் பணி துவக்கம்

பந்தலுார்; பந்தலுார் அருகே மராடி அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து, மீட்கும் பணி துவக்கப்பட்டது.பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியான எருமாடு அருகே மராடி பகுதியில் கடந்த, 1966 ஆம் ஆண்டு அக்., மாதம் அரசு பள்ளி துவக்கப்பட்டது. 3.25 ஏக்கர் நிலம் பள்ளிக்கு ஒதுக்கி தரப்பட்டது. இந்நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, நடுநிலைப் பள்ளியாக செயல்பட துவங்கியது. இதற்கிடையில் பள்ளி நிலத்தை பலரும் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் கடந்த, 2023 ஆம் ஆண்டு, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், பள்ளி விடுமுறை நாளில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பு சுவர் அமைக்க ஆட்சேபம்

அதில், ஆக்கிரமிப்பு நிலத்தை விடுத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருவதாக பெற்றோர் மீண்டும் புகார் எழுப்பினர். தொடர்ந்து தடுப்பு சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், நில அளவை செய்யப்பட்டதில், 36 சென்ட் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றிணைந்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாசில்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதில் அரசு பள்ளியின் ஆசிரியர் உள்ளிட்ட மூவர் ஈடுபட்டிருந்த நிலையில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் இணைந்து, ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நேற்று மதியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ் குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கவுரி மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர் தரப்பு வக்கீல் பரசுராமன் கூறுகையில், ''நில ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், முறையான தகவல் தெரிவிக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்,'' என, தெரிவித்து, தாசில்தார் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் கூறுகையில், ''முறைப்படி, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, சம்பந்தப்படவருக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது குற்ற செயலாகும். இது குறித்து மேலும் தகவல் ஏதேனும் தேவைப்பட்டால் முறைப்படி கடிதம் மூலம் தகவல் கூறினால், பதில் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி