உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் காலியாகும் அரசு டாக்டர் பணியிடங்கள்; உடனே நிரப்ப மக்கள் வலியுறுத்தல்

கூடலுாரில் காலியாகும் அரசு டாக்டர் பணியிடங்கள்; உடனே நிரப்ப மக்கள் வலியுறுத்தல்

கூடலுார் : கூடலுார் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த டாக்டர்களுக்கு, இம்மாதம் ஒப்பந்த காலம் முடிந்து செல்ல இருப்பதால், டாக்டர்கள் பற்றாக்குறை சூழல் ஏற்பட்டுள்ளது.ஊட்டியில், அரசு மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டதை தொடர்ந்து, கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, 2022ல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தும் வகையில், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, 31 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது.புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் பழைய நிலை தொடர்கிறது.

டாக்டர்கள் பற்றாக்குறை

இங்கு பணி ஒதுக்கப்பட்ட, 14 டாக்டர் பணியிடங்களில், தலைமை டாக்டர் உள்ளிட்ட சிலரை தவிர பலர் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அரசு ஒப்பந்த காலத்தை ஓராண்டாக மாற்றியது. தொடர்ந்து, கூடலுார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த, முதுநிலை டாக்டர்கள், கடந்த ஆண்டு தங்களை விடுவித்து சென்றனர்.தற்போது, தலைமை டாக்டர், குடியுரிமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட, 7 ஏழு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த, டாக்டர்கள், ஓராண்டு ஒப்பந்த காலம் முடிந்தது, இம்மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இதனால், அடுத்த மாதம் முதல் கூடலுார் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் பற்றாக்குறை, ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் ஏற்கனவே டாக்டர் பற்றாக்குறை உள்ளது. தற்போது ஒப்பந்த முறையில் பணியாற்றி வருபவர்கள் சென்று விட்டால், மேலும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு சிகிச்சை கிடைக்காமல் மக்கள் சிரமப்படும் சூழல் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலியாக உள்ள அனைத்து டாக்டர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஒப்பந்த அடிப்படையில் டாக்டர் பணிக்காலம் முடிந்து செல்வது குறித்து, காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். டாக்டர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ