ரத்ததான முகாம்களால் பெரும் பயன்; 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவுரவம்
ஊட்டி ; தன்னார்வ ரத்ததான முகாம்கள் சிறப்பாக நடத்தி கொடுத்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்தம் அளித்த, 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின், 14 நபர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், நடப்பாண்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை; தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்; தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றம் குழுமம் சார்பில், தேசிய தன்னார்வ ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், மாவட்டத்தில் உள்ள ரத்தவங்கிகளுக்கு, தன்னார்வ ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு ரத்தம் அளிக்கப்பட்டது. இதனால், பல நோயாளிகள் பயன் அடைந்தனர். இதற்கு காரணமான தன்னார்வ ஒருங்கிணைபாளர்கள், 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களிடமிருந்து, 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 'பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.