தாவரவியல் பூங்காவில் கைவினை பொருட்கள் கண்காட்சி
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கைவினை பொருட்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் கண்காட்சி நடந்து வருகிறது. நீலகிரியில், உள்ளூர் கைவினைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை மற்றும் இதர பொருட்களை காட்சிப்படுத்தும் பொருட்டு ஒரு வார கால நிகழ்ச்சியான 'ஆகான்ஷாஹாத்' என்ற நிகழ்ச்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. அதில், பரமசிவம், 'அய்யனோர் அம்மனோர்', நீலமலை, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் திறந்து வைத்தார். கோத்தகிரியில், 'வளர்ச்சியை நோக்கிய வட்டாரம்' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதாவுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 3 பேருக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 3 பேருக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில், 3 பேருக்கும் மகளிர் திட்டம் சார்பில், 3 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர், தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட ஊராட்சி செயலாளர் செந்தில், உதவி இயக்குனர் உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரம்மவித்யநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.