தவளை மலையில் தொங்கும் பாறைகள்; தேவையற்ற பயணம் வேண்டாம்
கூடலுார் : 'கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, தவளைமலை அருகே, 29ம் தேதி மிதமான மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், 30 அடி உயரத்தில், சில பாறைகள் விழும் நிலையில் இருப்பது தெரிய வந்தது. இரவில், போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு பின், அவசர தேவைக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அப்பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை நீலகிரி எஸ்.பி., நிஷா., அப்பகுதியில் ஆய்வு செய்த பின் கூறுகையில், ''மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், அரசு துறையினர் ஒருங்கிணைத்து கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகள் இரவு நேரத்தில் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். இரவில், ஊட்டியில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும்; கூடலுாரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய, 'சில்வர் கிளவுட்' பகுதியிலும் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். போலீசார் சோதனைக்கு பின், இரவில் ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், தவளை மலை, ஆகாசபாலம் பகுதியில் விபத்தை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்,''என்றார். ஆய்வின்போது, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தேசிய நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் எழில் உட்பட பலர் அதிகாரிகள் உடனிருந்தனர்.