அறுவடை திருவிழா: ஆர்வத்துடன் பங்கேற்ற பழங்குடியினர்
பந்தலுார்: பந்தலுாரில் நடந்த அறுவடை திருவிழாவில் பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் பூ புத்தரி எனப்படும், அறுவடை திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி பத்தாம் நாள் நடப்பது வழக்கம்.அதில், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள், ஒருவரை தேர்வு செய்து பத்து நாட்கள் விரதம் இருந்து, நெல் வயலுக்கு ஊர்வலமாக சென்று அங்கு குலதெய்வத்தை வழிப்படுவர். நெற்கதிர்களை, கோவிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் செய்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதனை தொடர்ந்து நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தவுடன், அறுவடை செய்யப்படும்.இந்நிலையில், பந்தலுார் அருகே குந்தலாடி பகவதி அம்மன் கோவில் கமிட்டியினர், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள் இணைந்து அறுவடை திருவிழாவை கொண்டாடினர். தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெற்கதிர்கள் தயாராகாத நிலையில், எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் செட்டி ஆலத்துார் பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். கோவில் கமிட்டி தலைவர் வேலாயுதன் மற்றும் கோவிலில் விரதம் இருந்த பழங்குடியின இளைஞர் குங்கன் ஆகியோர், வயலுக்கு சென்று குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்து நெற்கதிர்களை பறித்து, மகாவிஷ்ணு கோவிலுக்கு எடுத்து வந்தனர். அங்கு பழங்குடியின இசை வாத்தியாங்களுடன் நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், நெற்கதிர்கள் மற்றும் அரச மரத்து இலைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், குந்தலாடி பகவதி அம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள், பரசுராமன், பாபு, ராஜேஷ், ஜெயபிரகாஷ், பழங்குடியின சமுதாய தலைவர்கள் வாசு, குமரன், செங்குட்டவன்,வேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பழங்குடியினர், வயநாடன் செட்டி சமுதாய மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.