கூடலுாரில் கடும் மேக மூட்டம் ; சிரமத்தில் வாகன ஓட்டுனர்கள்
கூடலுார் : கூடலுாரில் மிதமான மழையுடன் தொடரும் மேக மூட்டம் காரணமாக, மலைப்பகுதிகளில் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, கேரளாவை ஒட்டிய கூடலுார், பந்தலுார் பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பெய்தது. நேற்று அதிகாலையும் மழை தொடர்ந்ததால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை தொடர்ந்த கடும் மேகமூட்டம் காரணமாக வளைவான மற்றும் மலை பகுதி சாலைகளில் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க கடும் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை பயன்படுத்திய வாகனங்களை இயக்கினர். போலீசார் கூறுகையில், 'மழை காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம், மேகமூட்டத்தை தவிர்க்க முடியாதது. எனவே, மழை மற்றும் மேகமூட்டம் ஏற்படும் போது, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும்,' என்றனர்.