மேக மூட்டத்தில் மறைந்த மலைப்பாதை: வாகன ஓட்டிகளே உஷார்!
குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடும் மேகமூட்டத்தால் கடுங்குளிர் நிலவியது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் அடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் அவ்வப்போது மழை, மேகமூட்டம், வெயில் என மாறுபட்ட கால நிலை நிலவியது. இன்று (நவ.,29) காலை முதலே வானம் இருண்டு, கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அத்துடன், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருவதால், நகரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெம்மை ஆடைகளை அணிந்தபடியே அத்தியாவசிய தேவைகளுக்காக வந்து சென்றனர். சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்திருந்ததால், வாகன ஓட்டிகள் பகலிலேயே முகப்பு விளக்குகள் மற்றும் மிஸ்ட் லைட் எரியவிட்டபடி மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கினர்.