குன்னுார் நகராட்சியில் வரி உயர்வு அதிகம்; நகர மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு நகர மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
குன்னுார்; 'ஊட்டி, கூடலுார், நெல்லியாளம், காரமடை உள்ளிட்ட நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு, 10,12 ரூபாய் என, வரி உள்ள நிலையில், குன்னுாரில் மட்டும், 30 ரூபாய் அதிகபட்சமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. குன்னுார் நகர மன்ற மாதாந்திர கூட்டம், தலைவர் சுசிலா தலைமையில், கமிஷனர் இளம்பரிதி முன்னிலையில் நடந்தது.கவன்சிலர் சாந்தா :எட்டு மாதமாக கோரிக்கை விடுத்தும் வார்டு பணிகளை ஒப்பந்ததாரர் முறையாக மேற்கொள்ளவில்லை. கவுன்சிலர் ஜாகிர் : நீலகிரியில் கடந்த, 3 ஆண்டுகளாக கட்டட அனுமதிக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது.சமீபத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சில நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண முன்னுதாரணமாக கவுன்சில் கூட்டத்தில் பொது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.சரவணகுமார் : ஊட்டி, கூடலுார், நெல்லியாளம், காரமடை உள்ளிட்ட நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு, 10, 12 ரூபாய் என, வரி உள்ள நிலையில், குன்னுாரில் மட்டும், 30 ரூபாய் அதிகபட்சமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சொத்து வரி, குப்பை வரி என பல வரிகள் போடப்பட்டுள்ள நிலையில், 30 ரூபாய் வரி வசூலிப்பதால் பல ஆயிரங்கள் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மணிகண்டன் : வரி வண்டியை பார்த்தாலே மக்கள் பயப்படுகின்றனர். மக்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதால், கட்டாயம் இதற்கு தீர்வு காண வேண்டும். கமிஷனர் : மிகவும் பழமையான நகராட்சியாக உள்ளதால், முதலில் நிர்ணயிக்கப்பட்ட தொகை, படிப்படியாக உயர்த்தப்பட்டதால் அதிகரித்துள்ளது. வருமானத்தில், 15 சதவீத அதிகரித்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி கிடைக்கும், என்றார். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.