உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பாதை நெடுஞ்சாலை பணிகளில் ஆமை வேகம்.. சீசனுக்குள் சீராகுமா...?

மலை பாதை நெடுஞ்சாலை பணிகளில் ஆமை வேகம்.. சீசனுக்குள் சீராகுமா...?

குன்னுார் ; நீலகிரி மாவட்டத்தில் கோடைசீசன் துவங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் விரிவாக்க பணிகள் நடந்த வந்த போதும், பணிகள் நிறைவு பெறாததால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த, 2022ல், மேட்டுப்பாளையம் - ஊட்டி பாதையில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் துவங்கியது. அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 35 கோடி ரூபாய்; குன்னுாரில் இருந்து ஊட்டி வரை, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், பணிகளை முறையாக ஒப்பந்ததாரர் மேற்கொள்ளாததால் தொய்வு ஏற்பட்டது. சாலை ஓரங்களில் தோண்டப்பட்ட பணிகள் பாதியில் விடப்பட்டு, மழையின் போது கற்கள் அடித்து சென்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஊட்டி -குன்னுார் சாலையில் பல விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூன், அக்., மாதங்களில் அருவங்காடு-, பாய்ஸ் கம்பெனி இடையே நடந்த விபத்துகளில் இருவர் பலியாகினர். மேலும் சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களாலும் விபத்துகளும் தொடர்கின்றன. ஆங்காங்கே கழிவு நீர் ஓடுவதால், வானங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு

குன்னுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மவுன்ட்ரோடு வழியாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க் வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் பல முறை தெரிவித்தும், மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்ற தயங்குகின்றனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்காததால், சாலையில் காலை முதல் மாலை வரை நிறுத்தும் வாகனங்களால், மக்கள், மாணவ, மாணவியர் சாலையில் நடக்கும் அவலம் நீடிக்கிறது. லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''ஆண்டுதோறும் கோடை சீசன் காலங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், அதற்கான நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில நெடுஞ்சாலை துறைகள் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், சீசன் காலங்களில் வாகன விபத்துகள்; போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோடை சீசனுக்குள் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதுடன், சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது,'' என்றார்.தேசிய நெடுஞ்சாலை மண்டல பொறியாளர் செல்வம் கூறுகையில், ''ஊட்டி- குன்னுார் சாலை பணிகள் விரைவில் துவங்கும். இதற்காக 'எஸ்டிமேட்' எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு வாரங்களில் அரசுக்கு சமர்ப்பித்து, டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் விரைவில் துவங்கும். சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ