கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
ஊட்டி: ஊட்டியில், கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பில்,'யு.ஜி.சி., நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஊட்டி அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று, 17வது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு கலை கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்க ஊட்டி கிளை தலைவர் சேவியர் இன்னாசி முத்து தலைமை வகித்தார். மாநில தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது, 'யு.ஜி.சி., கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தி உள்ள மாத ஊதியம், 57,800 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும், 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பி.எப்., இ.எப்., பிடித்த செய்ய வேண்டும். பணி கொடை, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.