தோட்டக்கலை சுற்றுலா தலங்கள் மூன்று நாட்களுக்கு பின் திறப்பு
ஊட்டி,; ஊட்டியில் மூன்று நாட்களுக்கு பின், தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. நீலகிரியில் கடந்த 25, 26ம் தேதிகளில், 'ரெட் அலர்ட்' அறிவிப்புக்கு பின்பும் மழை தொடர்கிறது. கோடை சீசன் சமயத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இங்கு வரும் சுற்றுலா பயணியரின் நலன் கருதி வனத்துறை, தோட்டக்கலை துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள், தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், கோடை சீசனுக்கு வந்த சுற்றுலா பயணியர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதற்கிடையே , நேற்று முன்தினம் தோட்டக்கலைக்கு சொந்தமான, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திடீரென பகல், 12:00 மணிக்கு திறக்கப்பட்டு மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டது. நேற்று, தோட்டக்கலைக்கு சொந்தமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டீ பார்க், மரவியல் பூங்கா, சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்காக்கள் திறக்கப்பட்டன. வனத்துறைக்கு சொந்தமானதொட்டபெட்டா உட்பட பிற சுற்றுலா மையங்கள் திறக்கப்படவில்லை.மூன்று நாட்களுக்கு பின் அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணியர் வர துவங்கினர். பூங்காவில் மழையால் பாதிக்கப்பட்ட மலர் அலங்காரங்களை பார்வையிட்டு சென்றனர். குறைந்த அளவில், சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால், பூங்கா சாலை வெறிச்சோடி காணப்பட்டது.