வைரஸ் குறித்து சந்தேகம் ஏற்பட்டால்...? மருத்துவ கல்லுாரி உதவி மையத்தை அணுகலாம்
ஊட்டி; 'வைரஸ் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:'மெட்டாப்நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி.)' முதன்மையாக குழந்தைகளை பாதிக்கிறது. சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது வயதானவர்களையும் பாதிக்கிறது. இந்த கிருமி மூக்கு சளி, நெஞ்சு சளி மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த வைரசை குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து மற்றும் தடுப்பூசி எதுவும் இல்லை. முக கவசம் அணிய வேண்டும்
போதிய ஓய்வு, நிறைய திரவ உணவு, காய்ச்சல் சளிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல், தும்மல் வந்தால் வாய் மற்றும் மூக்கை கைகுட்டை அல்லது துணி வைத்து மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.மேலும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் ; நோய் அறிகுறி இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; நோய்வாய்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும். அச்சம் தேவையில்லை
துண்டுகள், சோப்பு, கை குட்டை போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. எச்.எம்.பி.வி. , வைரஸ் குறித்து சந்தேகம் இருப்பின் சுகாதார துறையின் ஆலோசனைகள், அறிவுரைகள் பெற, நீலகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உதவி மையம்- 93423 30053, மருத்துவ பணிகள் துறை கட்டணமில்லா எண்-104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.