மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் தின விழா
07-Jun-2025
ஊட்டி; சொத்துக்களை எழுதி வாங்கி பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றினால், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து ஜீவனாம்சம் பெறலாம். என, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக முதியோர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மூத்த குடிமக்களுக்கான வார்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமை தாங்கி சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார். தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சந்திரசேகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ரீதியான விசாரணை
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாலமுருகன் பேசியதாவது, 'ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் வக்கீல்கள் வைத்து நடத்த முடியாதவர்களுக்கு, இலவசமாக வக்கீல்களை நியமித்து வழக்கை நடத்துவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவுகிறது. இந்த உதவியை பெற பெண்கள், குழந்தைகளுக்கு நிபந்தனைகள் இல்லை. கொத்தடிமை தொழிலாளர்கள், சிறை காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவைகளில் காவலில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினர் மற்றும் ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெறலாம். மூத்த குடிமக்களுக்கு தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே சட்ட உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் இந்த மையங்கள் செயல்படுகிறது. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை சரியாக பராமரிக்காமல் கைவிடுவது, சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றி முதியோர் இல்லங்களில் சேர்ப்பது போன்ற புகார்கள் இருந்தால் இந்த மையங்களில் அளிக்கலாம். புகார் குறித்து சட்டரீதியாக விசாரணை நடத்தி பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற்று தரப்படும்.' இவ்வாறு அவர் கூறினார். இதில் இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Jun-2025