விதிமுறை மீறி சில்வர் ஓக் மரம் வெட்டி கடத்தல்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் விதிமுறை மீறி சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது.கோத்தகிரி பகுதியில், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, சில்வர் மரங்கள், நிழலுக்காகவும், ஊடுபயிராகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு, விறகுக்காக பயன்படுத்தப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் குடும்ப தேவைக்காக மர வியாபாரிகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்கள் வெட்ட அனுமதி இருந்தாலும், துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பல இடங்களில் அனுமதி பெறாமல் மரம் வெட்டப்படுவது தொடர்கிறது. தற்போது, புறம்போக்கு நிலங்களில் இவ்வகை மரங்கள் அனுமதி இல்லாமல் வெட்டி கடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக, கட்டபெட்டு பகுதியில், எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி, கோத்தகிரி மற்றும் மேட்டுப்பானையம் சாமில்களில் பலர் விற்பனை செய்து வருகின்றனர். மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் இரவு, பகல் என பாராமல் சில்வர் ஓக் மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. எனவே, வனத்துறை உயர் அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் கூறுகையில்,''சில்வர் ஓக் மரங்கள் அனுமதியுடன் வெட்டப்பட வேண்டும். கட்டபெட்டு கக்குச்சி சுற்றுவட்டார பகுதியில் கூடுதலாக மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக இதுவரை தகவல் வரவில்லை. இருப்பினும், ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.