உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில்... இயற்கை உரம் இருப்பு...!விவசாயிகள் பயன் பெற அழைப்பு

கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில்... இயற்கை உரம் இருப்பு...!விவசாயிகள் பயன் பெற அழைப்பு

கோத்தகிரி:கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில், 3 டன் இயற்கை உரம் இருப்பு உள்ளதால், விவசாயிகள் வாங்கி பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி பேரூராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது. இங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில், கோத்தகிரி நகரை துாய்மையாகவும், பசுமையாகவும் வைக்கும் வகையில், கடந்த, 10 ஆண்டுகளாக, இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வளம் மீட்பு பூங்கா

கோத்தகிரி பேரூராட்சி உருவான, 1932 முதல் குப்பை குழி என்ற இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. பின்பு, 2014ம் ஆண்டு முதல், 1.75 ஏக்கர் பரப்பளவில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன், அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, வளம் மீட்பு பூங்காவாக குப்பைகள் மேலாண்மை செயல் படுகிறது.கோத்தகிரி நகரில் நாள்தோறும், 5 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. துாய்மை பணியாளர்கள், 52 பேர் காலையில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து, பகலில், மட்கும் குப்பைகளை இயற்கை உரமாகவும், மட்காத குப்பைகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தி வருகின்றனர்.அதன்படி, வளம் மீட்பு பூங்காவில் தற்போது, 3 டன் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ உரம், 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பலரும், உரத்தை வாங்கி செல்கின்றனர். இதனால், பேரூராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. சமீப காலமாக கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் இயற்கை உரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இங்கு குறைந்த விலையில் உரம் வழங்குவதால், சிறு விவசாயிகள் இதனை வாங்கி பயன்பெற வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், ''கோத்தகிரி பேரூராட்சியை பொருத்தமட்டில், திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, நகர பகுதியில் குப்பைகள் குறிப்பாக 'பிளாஸ்டிக்' கழிவுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், கோத்தகிரியை குப்பையில்லா நகரமாக மாற்றுவதுடன், துாய்மையாகவும், பசுமையாகவும் வைக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த பணிக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோத்தகிரி விவசாயிகள் கூடுமானவரை வளம் மீட்பு பூங்காவில் தரமாக தயாரிக்கப்பட்டு வரும் இயற்கை உரத்தை வாங்கி பயன் அடையலாம். விவசாயிகளின் தேவை அதிகமாகும் போது, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ