வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டீன் அரசு சார்பாகத்தான் பேசணும்.. உண்மையை அவர் எப்படி ஒப்புக்கொள்வார் ????
ஊட்டி : 'நீலகிரி மாவட்டத்தில் எச்.ஐ.வி., தொற்றால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; அதே நேரத்தில் போதை ஊசி, டாட்டூ மூலம் இதுவரை தொற்று பரவல் இல்லை,' என, தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நடந்த சட்ட சபை கூட்ட தொடரில் பேசிய தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'எச்.ஐ.வி., தொற்று கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழகத்தில், 25 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டு உள்ளது,' என, தெரிவித்தார். இத்தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா முக்கியத்துவம் கருதி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சார்பில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதுடன், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில் ரத்தம் வாயிலாகவும், மருத்துவமனை ஊசி வாயிலாகவும், எய்ட்ஸ் பாதிப்பு பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர். போதை ஊசியால் தொற்று இல்லை
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது:எந்த மருத்துவமனைகளிலும் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் அறவே இல்லை. அதே சமயத்தில் ரத்தம் தானமாக பெறும் பொழுது முழுமையாக அனைத்து பரிசோதனையும் செய்த பின்னரே நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. அனைத்து சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட திட்ட மேலாளர் அறிவழகன் கூறுகையில்,''எய்ட்ஸ் தொற்றை பொறுத்தவரை தகாத உறவு மூலமாகவும், விபத்து உள்ளிட்ட சில காரணங்களுக்காக பிறரிடமிருந்து ரத்தம் பெறும் போது அந்த நபருக்கு தொற்று பாதிப்பு இருந்தால், அதன் மூலமாகவும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரியை பொறுத்தவரை போதை ஊசி பயன்பாடு காரணமாகவும், டாட்டூ மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை பதிவுகள் இல்லை. பிற காரணங்களால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிலர் சிகிச்சை பெறுகின்றனர். டாட்டூ போடும்போது அதற்கான தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஊசி மட்டுமின்றி அதற்கு பயன்படுத்தும் 'டையை' ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, 508 பேர் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு ஆண்டுகள் கர்ப்பிணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பரிசோதனையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
டீன் அரசு சார்பாகத்தான் பேசணும்.. உண்மையை அவர் எப்படி ஒப்புக்கொள்வார் ????