பூமி இல்லாமல் மனித குலத்துக்கு வாழ்க்கை இல்லை அறிவியல் கருத்தரங்கில் தகவல்
கோத்தகிரி : கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், தீவிரமான வெப்ப அலைகள், உலகெங்கிலும் வீச தொடங்கி விட்டன. ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா மற்றும் ஜமைக்கா நாடுகளில் வறட்சி காரணமாக, மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.'மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு, அந்நாட்டு அரசுகள் யானைகள், வரிக்குதிரைகள் மற்றும் மான்கள் போன்ற வன விலங்குகளை மக்கள் கொன்று உண்ணலாம்,' என, அனுமதித்துள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பல உயிர்களை காவு வாங்கி கொண்டதை மக்கள் மறந்திருக்க முடியாது. அதற்கான காரணத்தை, விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்டு நாளில், சென்னையின் வெப்பநிலை, 36 டிகிரி 'சி' ஆக இருந்தது. காற்றின் ஈரப்பதம், 75 சதவீதத்திற்கு மேல் இருந்தது. இவை இரண்டும் சேரும் போது, வெப்பநிலை, 42 டிகிரிக்கு மேல் உயரும். அதனால் தான் அந்த துயர சம்பவம் நடந்தது என கூறப்பட்டுள்ளது.42 டிகிரி சென்டி கிரேட் வெப்பநிலையில், நமது உடல் வியர்வையை நிறுத்தி கொள்கிறது.இதன் விளைவித்தால் உடனடி மரணம்.ஏற்கனவே நமது நாட்டில், 25 சதவீதம் மக்களுக்கு மேல் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான். அத்தோடு, வெப்ப அலைகளும் சேர்ந்து கொண்டுள்ளது மனிதகுல சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும்.பூமிக்கு மனிதகுலம் அவசியம் இல்லை. ஆனால், பூமி இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை. உலக நாடுகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனி மனிதரும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை புரிந்து கொண்டு மரம் நடுதல், நுகர்வு கலாச்சார தாக்கத்தில் இருந்து விடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மனித குலத்தை காக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.மாணவர்களுக்கு குறும்படம் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் பீமன் வரவேற்றார். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.