ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக கருத்தரங்கு
ஊட்டி, ; ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொ) முனைவர் கவுதமராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''2025ம் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லுாரியின் நடைமுறைகளை புரிந்து கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்,''என்றார்.நிகழ்ச்சியில், கோத்தகிரி இட்டக்கல் குழும இயக்குனர் தொழிலதிபர் போஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: கல்வி என்பது ஒரு அழகான பயணம். பார்மசி, மனித நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு பணியோடு கூடிய பாடத்திட்டம். ஒவ்வொரு பாடத்தையும் புரிந்துணர்ந்து படிப்பது மிக முக்கியம். மாணவர்கள் தினசரி கற்றலை, ஒரு பழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும்.நாள்தோறும் கல்லுாரியில் கற்ற பாடங்களை வீட்டுக்கு சென்று மறுபடியும் வாசிக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கல்லுாரி நுாலகத்தை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும். பொழுதை வீணடிக்காமல், உடல் நலத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆரோக்கியமான உணவுடன், யோகா, நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சந்திரசேகர், பொன்னுசங்கர், பாபு, ஜூபி, சத்யநாராயணா, கிருஷ்ணவேணி, பிரியதர்ஷினி மற்றும் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் வடிவேலன் நன்றி கூறினார்.