சாமந்தி, சூரியகாந்தி தோட்டத்தை பார்வையிட கட்டணம் கூடுதல் வருவாய் ஈட்டும் கர்நாடகா விவசாயிகள்
கூடலுார்: கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டை பகுதி விவசாய தோட்டத்தில் பயிரிட்டுள்ள சாமந்தி, சூரியகாந்தி பூக்களை பார்வையிட, சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. கூடலுாரை அருகே, கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாய முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும் காய்கறிகள் உற்பத்தி செய்து, கர்நாடக மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப விவசாய தோட்டங்களில் பயிர்களை மாற்றி பயிரிட்டு வருகின்றனர். தற்போது, சூரியகாந்தி செடிகளும், கேரள மக்களின் ஓணம் பண்டிகையின் போது, பூ கோலம் போட அதிக பயன்படுத்தப்படும் சாமந்தி பூ செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். அந்த செடிகளில் தற்போது பூ பூத்து, வண்ணமயமாக காட்சியளிக்கிறது. மைசூரு தேசிய நெடுஞ்சாலை, அங்காலா, கோபாலசுவாமி பெட்டா உள்ளிட்ட சாலையோரங்களில் உள்ள விவசாயத் திட்டங்களில், பூத்து குலுங்கும் சூரியகாந்தி மற்றும் சாமந்தி பூக்கள் வெளி மாநில சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பூந்தோட்டங்களிலுள்ள சென்று பூக்களை பார்வையிட்டு, வீடியோ, போட்டோ எடுத்து கொள்ளவும் சுற்றுலா பயணிகளிடமிருந்து, விவசாயிகள் நுழைவு கட்டணமாக, 20 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'சமையல் எண்ணெய்க்காக சூரியகாந்தி செடிகளும், கேரளா ஓணம் பண்டிகைக்காக சாமந்தி பூ செடிகளும் அதிகளவில் பயிரிட்டுள்ளோம். தற்போது, இந்த செடிகளில் பூத்துள்ள பூக்களை, இவ்வழியாக சென்று வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ரசித்து செல்கின்றனர். பூந்தோட்டத்துக்குள் சென்று ரசித்து போட்டோ எடுத்து செல்ல, சிறிய தொகையை கட்டணமாக வசூல் செய்வதன் மூலம், கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது,' என்றனர்.