உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைகளை கண்காணித்து விரட்ட பயிற்சி கூடலுார் வன கோட்ட ஊழியர்கள் பங்கேற்பு

காட்டு யானைகளை கண்காணித்து விரட்ட பயிற்சி கூடலுார் வன கோட்ட ஊழியர்கள் பங்கேற்பு

கூடலுார்; கூடலுார் வனகோட்ட ஊழியர்கள், 'நைட்விஷன் ட்ரோன் கேமரா' பயன்படுத்தி காட்டு யானைகளை கண்காணித்து விரட்டுவது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது.கூடலுார் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், யானை -மனித மோதல்களை தவிர்க்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஓவேலி வனச்சரகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய ஐந்து கேமராக்கள் வைத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்டி வருகின்றனர். எனினும், காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களில் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட, புதிய தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய, 'நைட் விஷன்' (தெர்மல்) ட்ரோன் கேமரா பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இதற்கான, 3 நாட்கள் பயிற்சி முகாம், ஜீன்பூல்தாவர மையத்தில் துவங்கியது. வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து, 'நைட் விஷன்' (தெர்மல்) ட்ரோன் கேமராபயன்படுத்தி காட்டு யானைகளை கண்காணித்து, விரட்டுவதுகுறித்து விளக்கினார். முகாமில், பயிற்சி ஐ.எப்.எஸ்., அதிகாரி சாய் சரண் ஷெட்டி, பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர்கள் வீரமணி, சஞ்சீவ், ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், அய்யனார் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, கேமரா செயல்பாடுகள் குறித்த செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''பயிற்சி பெற்ற வன ஊழியர்கள், இரவில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெர்மல் கேமராவை பயன்படுத்தி, கண்காணிப்பதுடன், அதில் உள்ள ஒலிபெருக்கி மூலம், மக்களுக்கு யானை நடமாட்டம் குறித்து தகவல்களை தெரிவிக்க முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ