குன்னுார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணியில்... தொலை நோக்கு திட்டம் அவசியம்!ஆற்றோர பகுதிகளின் பாதுகாப்பு முக்கியம்
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் பகுதி, நகரின் முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, இங்கு இட வசதிகள் இல்லாத காரணத்தால், நாளுக்கு, நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தேர்தல் காலங்களில், மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய அறிவிப்புகளில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டம் அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற பிறகு, அந்த திட்டம் கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது. தடையாக இருந்த ஆக்கிரமிப்பு
இந்த தாமதத்துக்கு, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில், சில அரசியல் வாதிகளின் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது, முக்கிய காரணமாகும். குறிப்பாக, ஐகோர்ட் உத்தரவை முழுமையாக செயல்படுத்த முடியாத வகையில் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த கன மழையில், டீக்கடை ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி இடிக்க, வருவாய் துறை உத்தரவிடப்பட்டது. இதன் பேரில், இந்த பகுதியில் இருந்த, 10க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன. ஆனால், இடிக்கப்பட்ட கட்டட கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சமீபத்தில் நடந்த ஆய்வு
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத் திட்டம், தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறும்போது, ''இருக்கைகள் கூடிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் காலத்தின் தேவை என்பதால் கமிஷனர் விரிவான ஆய்வறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார். முன்னுரிமை அடிப்படையில் போதுமான நிதியை ஒதுக்கி தர வலியுறுத்தப்படும்,'' என்றார்.லஞ்சமில்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் குறித்த தெளிவான வரைபடங்களுடன் கூடிய விளக்கத்தை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். மீண்டும் கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையிலான விரிவாக்கமாக இருக்க வேண்டும்.பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்புக்கு ஆற்றோர பகுதியில் தடுப்புச்சுவர் எழுப்ப தனி நிதி ஒதுக்கி, அந்தப் பகுதியில் ஊட்டியை போன்று சாலையாகவும், பஸ் ஸ்டாண்ட் தனியாகவும் இருப்பது போன்று அமைக்க வேண்டும். அப்போது தான் ஆற்றோர பகுதிக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும்,'' என்றார்.சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில், ''குன்னுார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணியின் போது, தீயணைப்பு நிலையத்தின் இடத்துடன் கட்டுமான பணிகளை விரிவாக்கம் செய்வதன் மூலம், அதே இடத்தில் தீயணைப்பு துறைக்கான வாகனங்களை நிறுத்தவும் வழி வகை ஏற்படும். மேலும், பஸ் ஸ்டாண்டில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க, கோத்தகிரி சாலையில், இருந்து வரும் பஸ்கள் ஒரு புறமும்; ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மறுபுறமும் நிறுத்தும் அளவுக்கு கட்டுமான திட்டங்களை மாற்ற வேண்டும்,'' என்றார்.