உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி பணியில் தொய்வு! எளிதாக போதை பொருட்கள் கடத்தப்படும் அபாயம்

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி பணியில் தொய்வு! எளிதாக போதை பொருட்கள் கடத்தப்படும் அபாயம்

பந்தலுார் : தமிழக-கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், எளிதாக போதை பொருட்களை கடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக எல்லையில் உள்ள, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், 'கக்கனல்லா, நாடுகாணி, சோலாடி, மணல்வயல், கோட்டூர், தாளூர், கக்குண்டி, பூலக்குண்டு, நம்பியார்குன்னு, மதுவந்தால், பாட்டவயல்,' ஆகிய சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கேரளா மாநிலம் மற்றும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், ஆய்வு செய்யப்பட்டு அனுப்பும் பணியில் போலீசார், வனத்துறை, தனியார் நிறுவன பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சோதனை சாவடிகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்து மற்றும் வெடி மருந்து பொருட்கள் உள்ளிட்ட சாதனங்கள் கடத்தி வருவதை தடுக்கவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முறையான சோதனைகள் இல்லை

இந்நிலையில், சமீப காலமாக நாடுகாணி மற்றும் கக்கனல்லா சோதனை சாவடிகள் தவிர, பிற சோதனை சாவடிகளில் முறையான சோதனைகள் இல்லாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் கஞ்சா, எம்.டி.எம்.ஏ., உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், வனவிலங்குகள் வேட்டை போன்ற சம்பவங்கள் சாதாரணமாக அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக, கூடலுார் மற்றும் குன்னுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில், சமீப காலமாக போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிலரை கைது செய்து, அவர்களுடன் தொடர்புடைய உள்ளூர் ஆட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'மாநில எல்லை சோதனை சாவடிகளில், வாகன சோதனைகளை முழுமைப்படுத்தும் வழியில் போதிய பணியாளர்கள் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஈடுபடுத்தப்படுவதுடன், அவ்வப்போது மாவட்ட கலெக்டர், எஸ்.பி., தலைமையிலான அதிகாரிகள் திடீர் தணிக்கை மேற்கொள்ளவும் வேண்டியது அவசியம் ஆகும்.இல்லையெனில், இந்த சாலைகளில், போதை மற்றும் வன விலங்குகள் வேட்டை தவிர, வெடி மருந்து பொருட்களையும் கடத்தி வருவது சாதாரண செயலாக மாறிவிடும்,' என்றனர்.

'இ-பாஸ்' பதிவு பணியிலும் சிக்கல்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், மாநில எல்லையில் உள்ள கல்லார், குஞ்சப்பனை, கூடலுார்- ஊட்டி சாலையில் உள்ள சோதனை சாவடிகளில், இ-பாஸ் சோதனை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், குஞ்சப்பனை, கெத்தை போன்ற சோதனை சாவடிகளில் சுற்றுலா வாகன சோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இரவில் இவ்வழிகளில் வரும் வாகனங்கள்இ-பாஸ் சோதனை இல்லாமல் வருவதாகவும்,வாகன ஓட்டிகள், உள்ளூர் போலீசாரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இப்பகுதிகளில் உரிய சோதனைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ