வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11பேரூராட்சிகளிலும் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.அவர்களுக்கும் இதே நிலைதான்.அவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை....
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், பல பேரூராட்சிகளில் வசிக்கும், 20க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிடைக்காத அவலம் தொடர்கிறது.ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, ஊட்டி, கூடலுார், குந்தா பகுதிகளில், குரும்பர், தோடர், இருளர், பணியர், கோத்தர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்கள், கிராமபகுதிகளில் வசித்து வருகின்றனர். பழங்குடியினருக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்கள் வகுத்த போதும், பெரும்பாலான திட்டங்கள் உரிய முறையில் அவர்களுக்கு சென்றடைவதில்லை. அதில், பிரதமரின், 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்களிப்புடன் மலை பகுதிகளுக்கு, 5.73 லட்சம் ரூபாய் கான்கிரீட் வீடு கட்ட ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் பல பழங்குடியினர் கிராமங்களில் செயல்படுத்தவில்லை. மாநில அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி, சில கிராமங்களில் மட்டும் வீடுகளை கட்டி தருகிறது. இந்நிலையில், குன்னுார் அருகே செங்கல் புதுார் கிராமத்தில், 20 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, 2 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படவில்லை. இதேநிலை, கூடலுார், பந்தலுார் மற்றும் மாவட்டத்தின் பல கிராமங்களில் நிலவுகிறது. திட்டங்களால் பயனில்லை
நீலகிரி மாவட்ட, ஆலு குரும்பா பழங்குடியினர் சங்க தலைவர் மணி கூறுகையில்: ''கடந்த, 2013- -14ல் யானை பள்ளம், சடையன் கொம்பை உள்ளிட்ட சில பழங்குடியினர் கிராமங்களில் பழங்குடியினர் சிலருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. பெரும்பாலான பழங்குடியின கிராமங்கள் பேரூராட்சியில் சேர்க்கப்பட்டதால், மத்திய அரசின் 'ஜன்மன்' திட்டம் பழங்குடியினர் கிராமங்களில் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அதே போல, மாநில அரசின் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலவு செய்ய வேண்டும் என்பதாலும், மிகவும் குறைந்த தொகை ஒதுக்குவதாலும், ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியினருக்கு இத்திட்டம் பயனில்லாமல் உள்ளது.உதாரணமாக, செங்கல்புதுார் கிராமத்தில், அரசின் வீடு கிடைக்காததால், மண் மற்றும் குச்சிகளால் வீடு அமைத்து ராதா என்ற மூதாட்டி இன்றவும் வாழ்ந்து வருகிறார். இப்பிரச்னைகளுக்க தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பயனில்லை,'' என்றார். ஊராட்சியாக மாற்ற வேண்டும்
நீலகிரி மாவட்ட உள்ளாட்சி மீட்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''மாவட்டத்தில் உள்ள, பழங்குடியினர் உட்பட ஏழை, எளிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் பெரும்பாலும், 11 பேரூராட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளன. ஊராட்சியாக இருக்க வேண்டிய இந்த கிராமங்களில், தேயிலை எஸ்டேட்டுகளின் வருமானத்தை கணக்கில் எடுத்து, பேரூராட்சிகளாக மாற்றப்பட்டதால், மக்களின் வாழ்க்கை தரம் உயராமல் உள்ளது. இதனை ஒப்பு கொண்ட முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இதற்கான முயற்சிகள் மேற்கொண்டு கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பினார். ஆனால், நடவடிக்கை இல்லை.மாவட்டத்தில், 35 ஊராட்சிகளை 93 சிற்றுாராட்சிகளாகவும், அனைத்து பேரூராட்சிகளையும் ஊராட்சிகளாகவும் மாற்றினால் மட்டுமே பழங்குடியினரின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,''என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11பேரூராட்சிகளிலும் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.அவர்களுக்கும் இதே நிலைதான்.அவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை....