காதல் விவகாரத்தில் அரிவாள் வெட்டு; கோத்தகிரியில் ஒருவர் கைது
கோத்தகிரி; கோர்த்தகிரி தவிட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் உலகராஜா,48, கட்டட தொழிலாளி. இவருக்கு, மனைவி சந்திரகுமாரி, மகன் ஹரிஷ் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகளும், கோவை கவுண்டபாளையத்தை சேர்ந்த அன்சார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே, அன்சார் தனது காதலியை வீட்டுக்கு வந்து சந்தித்து செல்வதாக தெரிகிறது. இந்த விஷயம் உலகராஜனின் தம்பி சந்திரசேகருக்கு தெரியவர ஆத்திரம் அடைந்த அவர் கண்டித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் காதலியை சந்திக்க வந்த, அன்சாரிடம் சந்திரசேகர், 'என் அண்ணன் மகளுக்கு நான் தான் மாப்பிள்ளை பார்ப்பேன்; தேவையில்லாமல் இங்கு வந்து பிரச்னை செய்ய வேண்டாம்,' என, கூறியுள்ளார். 'இதனை கண்ட, உலகராஜா எனது வீட்டிற்கு மருமகனாக வருபவரை திட்டக்கூடாது,' என, தடுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், உலகநாதன், அவரது மனைவி சந்திரகுமாரி, மகன் ஹரிஷ் மற்றும் அன்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டியுள்ளார். நால்வரும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். புகாரின்பேரில், எஸ்.ஐ.,மனோ கரன் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தார்.