கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடியவர் திடீர் உயிரிழப்பு
குன்னுார்; குன்னுாரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கொண்டிருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பாய்ஸ் கம்பெனி மாதா தேவாலயத்தில் இருந்து கேரல்ஸ் குழுவினர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வீடுகள் தோறும் சென்று பாடல் பாடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 6ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வருகை தந்த பிரான்சிஸ்,58, என்பவர் இந்த குழுவினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஒசட்டி பகுதியில் நடனமாடி கொண்டிருந்தார்.அப்போது திடீரென விழுந்து அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மகள்கள் வெளிநாட்டில் இருந்த நிலையில், உடல் குன்னுாரில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இவரது உடல் தர்மபுரி மாவட்டத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. இவரின் இறப்பு 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.