மனித மூளையில் சிந்திக்கும் திறனை வழங்குவது கணிதம்: கருத்தரங்கில் தகவல்
கோத்தகிரி; 'கணிதம் மனித மூளையின் செயல்பாடுகளை விரிவாக்கி சிந்திக்கும் ஆற்றலை தருகிறது,' என கோத்தகிரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராயன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:கணித மேதை ராமானுஜர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே, கல்லுாரி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார் என கூறப்படுகிறது. வெறும், 32 ஆண்டு காலம் வாழ்ந்த அவர், தனது வாழ் நாளில், 3.900 கணித சமன்பாடுகளை கண்டறிந்தார்.அவர் எழுதி வைத்துள்ள சில கணித சமன்பாடுகளுக்கு, இன்றளவும் அதற்கான விடை தெரியாமல் கணித பேராசிரியர்கள் தத்தளிக்கின்றனர். கணிதம், பள்ளி மாணவர்களுக்கானது என, பொதுமக்கள் நினைக்கின்றனர். மாறாக, கணிதம் நமது மூளை செயல்பாடுகளை விரிவாக்கி, முறையாக சிந்திக்கும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது.மனித மூளையில், 10 ஆயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொரு நியூரானும், ஆயிரம் நியூரான்களோடு இணைப்பில் உள்ளன. இந்த நியூரான்களின் எண்ணிக்கையை, கணிதம் அதிகரிக்க செய்கிறது. மூளையை சுருங்கி விரியும் தன்மையை அதிகரிக்க செய்வதால் நமது சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிப்பதில் மனக்கணக்குகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. ஒரு கம்ப்யூட்டர் நிபுணரை விட, மளிகை கடையில் மன கணக்கு போடும் ஊழியருக்கு மூளையின் செயல்படும் திறன் அதிகம்.எனவே, நமது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்வதற்கு மன கணக்குகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், காலநிலை மாற்றம் மீட்டெடுப்பு மற்றும் பசுமை நீலகிரி-2024 திட்டத்தின் கீழ், 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.