உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கன்டோன்மென்ட்டில் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தல்

கன்டோன்மென்ட்டில் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தல்

குன்னுார்; 'கன்டோன்மென்ட் வாரியத்தில், கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, கிளீன் வெலிங்டன் அமைப்பை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம்-2025 பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் கழிவுகளை, குறைப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற, பணிக்குழு மற்றும் விழிப்புணர்வு துாதுவர்கள் உருவாக்குதலுக்கான சிறப்பு கூட்டம் வாரிய அரங்கில் நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று, திட்டத்தை செயல்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.குன்னுார் ஜே.சி.ஜ., தலைவர் விஜய்காந்த்: மட்கும், மட்காத பொருட்களை பிரித்து வழங்கும் முறைகளை வீடுகளில் கையாள சரியான விழிப்புணர்வு அவசியம். பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடை உள்ள நிலையில், குடிநீருக்கான வசதிகள் அதிகரிக்க வேண்டும்.'கிளீன்' குன்னுார் தலைவர் சமந்தா: பால் பிளாஸ்டிக் கவர்களை வெட்டி தனியாக வீசாமல், பால் கவர்களை வெட்டும் போது, அதன் துண்டு அதிலேயே இருக்குமாறு இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரிய முன்னாள் கவுன்சிலர் மார்ட்டின்: கன்டோன்மென்ட் வாரிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். நீலகிரி நற்பணி மய்யம் பொருளாளர் கோவர்த் தனன்: தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து வியாபாரிகளுக்கு உள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கும், கூட்டாக ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னாள் துணை தலைவர் வினோத் குமார்: குப்பை இல்லாத நகரமாக திகழும் கன்டோன்மென்ட் விருதுகள் பல பெற்றுள்ளன. முதன் முதலாக வாரியத்தில் வாட்டர் ஏ.டி.எம்., கொண்டு வரப்பட்டது. தற்போது குடிநீருக்காக, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். பாட்டில்கள் கொடுத்து இலவச தண்ணீர் வழங்க இடம் ஒதுக்கினால் பயனாக அமையும்.வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பாபாசாகிப் லோட்டே கூறுகையில், ''ஒரு நாளைக்கு, 5 முதல், 10 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது. சுகாதார மேம்பாடுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை தேடி, காட்டு பன்றி வருவதால் குப்பை தொட்டிகள் வைக்க முடியாது. கரடி, சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சி மேற்கொண்டு, துாய்மை தாதுவர்களாக இருந்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். வியாபாரிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !