பருவமழை எதிரொலி: 5,000 மணல் மூட்டைகள் தயார்
கோத்தகிரி : கோத்தகிரியில் வடகிழக்கு பருவ மழை பேரிடரை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் பட்சத்தில், மண் சரிவு, சாலை துண்டிப்பு போன்ற பேரிடர் நடப்பது வழக்கமாக உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை சமாளிக்க, மாவட்ட நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளில் கண்காணித்து வருகிறது.கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையாக, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மணல் மூட்டைகளை நிரப்பி, தயாராக வைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறுகையில்,'வடகிழக்கு பருவமழையை சமாளிக்க கோத்தகிரி பகுதியில் மட்டும், 5,000 மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இப்பணி நிறைவடையும். நிரப்பப்பட்ட மணல் மூட்டைகள், தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்படும்,' என்றனர்.