சேற்றில் சிக்கிய குட்டியை போராடி மீட்ட தாய் யானை
கூடலுார்; தேயிலை தோட்டத்தில் சேற்றில் சிக்கிய குட்டி யானையை, தாய் யானை போராடி மீட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே, பாண்டியார் அரசு தேயிலை தோட்ட செடிகளுக்கு இடையே, நேற்று காலை குட்டி யானை, சேற்றில் சிக்கி, எழ முடியாமல் போராடியது. தாய் யானை, அதை மீட்க முயன்றது. இதை, காலை, 10;00 மணிக்கு பார்த்த தொழிலாளர்கள் சிலர், வனத்துறைக்கு தெரிவித்தனர். நாடுகாணி வனச்சரகர் ரவி, வன காவலர்கள் கலைகோவில், சுப்ரமணி, வேட்டைதடுப்பு காவலர்கள் அங்கு வந்து, யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தாய் யானை மூன்று மணி நேரம் போராடி, குட்டியை மதியம், 1:00 மணிக்கு பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றது. மீட்கப்பட்ட குட்டி யானை சோர்வாக காணப்பட்டது. ஆனாலும், பாதிப்பின்றி நல்ல நிலையில் நடந்து சென்றது. வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானை நல்ல நிலையில் உள்ளது. யானைகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம்' என்றனர்.