உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடரும் மண் சரிவு இன்றும் மலை ரயில் ரத்து

தொடரும் மண் சரிவு இன்றும் மலை ரயில் ரத்து

குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் இன்றும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை செய்து வருகிறது. குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கடந்த 18ல் ஹில்குரோவ், ஆடர்லி பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள் உருண்டு விழுந்தன. சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட போதும், கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஹில்குரோவ் குகை அருகே விழுந்த ராட்சத பாறையை உடைத்து அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று பெய்த கனமழையில் காட்டேரி, ரன்னிமேடு, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டது. ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள் மண் சரிவை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிப்படைந்த ரேக் பார், தண்டவாளம் மாற்றப்பட உள்ளது. கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் ஒரு நாள் ரத்து செய்யப்படுகிறது. ஊட்டி - குன்னூர் ரயில் பாதையில் பாலவாசி அருகே பெரிய மரம் விழுந்தது. உடனடியாக மரம் வெட்டி அகற்றப்பட்டது. காலை 7:45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்படும் மலை ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ஊட்டி-குன்னூர் இடையே பாதிப்பின்றி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி