உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை விவசாயத்தில் மலை காய்கறி விவசாயிகள் ஆர்வம்; தோட்டக்கலை இணை இயக்குனர் தகவல்

இயற்கை விவசாயத்தில் மலை காய்கறி விவசாயிகள் ஆர்வம்; தோட்டக்கலை இணை இயக்குனர் தகவல்

ஊட்டி; ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 'இயற்கை வேளாண்மைக்காக மத்திய, மாநில அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளது. அது செயல்படும் விதம் குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும்.தேசிய தோட்டக்கலை வேளாண்மை திட்டத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளன. கூடலூரில் நேந்திரனில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் குட்டைரகம் அறிமுகப்படுத்த வேண்டும். நீல கிரியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் எத்தனை உள்ளன,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.தொடர்ந்து, தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி பேசியதாவது:நீலகிரியில், 1620 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்ய, 1,331 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-- 25ம் ஆண்டு இயற்கை வேளாண்மை செய்ய, 1680 ஏக்கர் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு, 2.26 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.

நேந்திரனில் குட்டை ரகம்

மேலும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், காய்கறி, நறுமண பயிர்கள் அதிகரிப்பு, பண்ணை குட்டை அமைத்தல், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி, தேனி வளர்ப்பு, மண்புழு உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. நேந்திரனில் குட்டை ரக வாழையான வாமன் ரக வாழை இந்த ஆண்டு முதல் செயல் விளக்க திடல்கள் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்படும். தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் வட்டாரம் தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அங்கக வேளாண்மை தொடர்பாக நடத்தப்படும் அனைத்து பயிற்சிகள் மற்றும் காய்கறிகளின் சாகுபடி மற்றும் விலை விவரம் ஆகியவை தெரிவிக்கப்படுகின்றன. மேலும், இனி வரும் காலங்களில் கிராமம் தோறும் விவசாயிகளுக்கு நேரடியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை