நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
பந்தலூர்: நகர் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. பந்தலூர் பஜார் பகுதியில் நெல்லியாளம் நகராட்சி பராமரிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு, தமிழக,- கேரளா அரசு பஸ்கள் மற்றும் தனியார் மினி பஸ்கள், பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதுடன், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் எந்நேரமும் பயணிகள் வாகனங்களுக்காக காத்திருக்கின்றனர். கூட்டமாக கால்நடைகள் உலா வருவதால் மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சாணத்தை மிதித்து வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பஜார் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் கூறுகையில், ''கால்நடைகளை பஜார் பகுதியில் சுற்றித்திரிவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் கால்நடைகளை பஜார் பகுதியில் விடுவதை தடுக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.' என்றனர்.