குன்னுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி உத்தரவு
குன்னுார்; 'குன்னுார் வி.பி., தெரு, மவுண்ட் ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை, வரும், 25ம் தேதிக்குள் காலி செய்து அகற்ற நகராட்சி உத்தரவிட்டுள்ள நிலையில், பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுார் வி.பி., தெரு, மவுண்ட் ரோடு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்ட நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள மவுண்ட் ரோடு, வி.பி., தெரு மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சாலைகளில் அனுமதி இல்லாமல் வைத்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, 25ம் தேதிக்குள் அகற்ற நகராட்சி உத்தரவிட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளில், லைசென்ஸ் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வியாபார பகுதிகளில் மட்டும் வியாபாரம் மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. தவறினால் நகராட்சி, வருவாய் துறை, காவல் துறை இணைந்து கடைகளை அகற்றவும், அதற்கான தொகை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவின் பேரில், ஆற்றோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், மீண்டும் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மவுண்ட் ரோடு, வி.பி., தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும், இங்குள்ள அண்ணா சிலையை வேறு இடத்திற்கு மாற்றவும் மாவட்ட கலெக்டருக்கு ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களையும் வேறு இடத்திற்கு மாற்றி மக்கள் எளிதாக நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் நிர்பந்தம் என்ற எவ்வித பாரபட்சமின்றி அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'குன்னுார் நகராட்சியுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.