| ADDED : நவ 19, 2025 04:20 AM
ஊட்டி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஊட்டி வட்டார வள மையம் மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழு நிபுணர்கள் பங்கேற்று, மருத்துவ ஆலோசனை, முதல்-வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகியவை குறித்து அறிவுரைகள் வழங்கினர். மேலும், மாணவர்களை மதிப்பீடு செய்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் இலவச ரயில் மற்றும் பஸ் பயணச்சலுகை பெறுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவித்தொகைக்கான பதிவு செய்யப்பட்டது. முகாமில், 18 வயது வரை உள்ள 72 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், 12 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கான மருத்துவ அறிவுரைகளும் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன் உட்பட பலர் பங்கேற்றனர்.