நெல்லியாளம் நகராட்சி மாதாந்திர கூட்டம்; தலைவர் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் துவங்கியது. கமிஷனர் சுவேதா ஸ்ரீ முன்னிலை வகித்தார். அப்போது, கவுன்சிலர்கள் புவனேஸ்வரன், ஜாபீர், ஷீலா, சித்ரா, சாஹினா, ஸ்ரீகலா, செல்வராணி, புவனேஸ்வரி, வசந்தகுமாரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'தலைவருக்கு சாதகமாக செயல்படும் வார்டு கவுன்சிலர்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, 20 லட்சம் முதல், 40 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் நடக்கிறது.மேலும், வார்டுகளில் அடிப்படை பிரச்னைகள் குறித்து, தலைவரின் ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட செய்து, அதனை தலைவர் நேரடியாக ஆய்வு செய்து கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நிதி ஒதுக்கீடு செய்கிறார். ஏற்கனவே டெங்கு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், மன்றத்திற்கு தெரியாமல் கூடுதலாக, 12 பேரை நியமனம் செய்துள்ளது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டும், 12 கவுன்சிலர்கள் மீது பழிவாங்கும் வகையில், புகார் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது,' என்று கூறி, தலைவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, தி.மு.க., கவுன்சிலர் சேகர் கவுன்சிலர்களை சமாதானம் செய்து, கமிஷனர் நேரடியாக தலையிட்டு வளர்ச்சி பணிகளை ஒதுக்கீடு செய்ய கூறினார். தொடர்ந்து, 'குடிநீர் உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது; குடிநீர் கிணறுகளுக்கு குளோரிநேசன் செய்வது; கூடுதலாக நியமனம் செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது,' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.