வீணாகும் களை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும்... புதிய எரிபொருள்! தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் துவக்கம்
கூடலுார்: மசினகுடியில் வனத்துறையினர் அமைத்துள்ள தொழிற்சாலையில், களை செடிகளை பயன்படுத்தி, 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருள் உற்பத்தி செய்து, கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் உத்தரவுப்படி, நீலகிரி வனங்களில் உண்ணி உள்ளிட்ட களை செடிகளை அகற்றும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை, நீதிபதிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வனங்களிலிருந்து அகற்றப்படும் உண்ணி செடிகளை, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, வருவாய் ஈட்டும் நடவடிக்கையில் முதுமலை மசினகுடி வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் உற்பத்தி அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அகற்றப்படும் உண்ணி செடிகளை, சேகரித்து அதனை உலர்த்தி இயந்திரம் மூலம் 'பிரிக்வெட்ஸ்' எனப்படும் உருளை வடிவிலான எரிபொருளாக தயாரித்து விற்பனை செய்யும், தொழிற்சாலையை மசினகுடி பகுதி யில் அமைத்துள்ளனர். இத்திட்டத்தின் படி, வனப்பகுதிகளில் அகற்றப்படும், உண்ணி செடிகளை நவீன இயந்திரம் உதவியுடன் துகள்களாக மாற்றி உலர வைத்து, மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்கு எடுத்து வந்து, இங்குள்ள இயந்திரங்கள் மூலம் 'பிரிக்வெட்ஸ்' எரிபொருளை தயாரிக்க துவங்கியுள்ளனர். இதன் பயன்பாடு குறித்து தொழிற்சாலையில் சோதனை பணிகள் முடிந்த நிலையில், பிரிக்வெட்ஸ் எரிபொருளை விற்பனை செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, உண்ணி செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட, 9 டன் எரிபொருளை கூடலுாரில் உள்ள சாலிஸ்வரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வழங்கி உள்ளனர். தொடர்ந்து, அதிகளவில் பிரிக்வெட்ஸ் எரிபொருளை உற்பத்தி செய்து, தேயிலை தொழிற்சாலைக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த பணி வெற்றியடைந்தால், மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் தேவை பூர்த்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்குடியினருக்கு பணி மசினகுடி வனத்துறையினர் கூறுகையில், 'சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, வனங்களில் பயனற்று வரும் உண்ணி உள்ளிட்ட களை செடிகளை, தொடர்ச்சியாக அகற்றி வருகிறோம். இவ்வாறு அகற்றப்படும் செடிகளை, பயன்படுத்தி 'பிரிக்வெட்ஸ்' எனப்படும் உருளை வடிவிலான எரிபொருளை தயாரிக்கும் தொழிற்சாலை, அமைத்து, உற்பத்தியை மேற்கொண்டுள்ளோம். உற்பத்தி செய்யப்பட்ட பிரிக்வெட்ஸ் எரிபொருளை, கூடலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வழங்கும் பணியை துவக்கி உள்ளோம். இத்தொழிற்சாலையில் தற்போது, 25 பழங்குடியினர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்டம் முழுவதும் விரிவாக்கும் பட்சத்தில், ஆயிரக் கணக்கானோர் பணி பெற முடியும். இதற்கான விலை தற்போது ஆயிரம் கிலோவுக்கு, 7,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.