கிராமத்துக்கு புதிய மினி பஸ் இயக்கம்; மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்
கூடலுார்; கூடலுாரில் இருந்து ஸ்ரீமதுரை கிராமங்கள் வழியாக பாலம் வயலுக்கு மினி பஸ் இயக்கப்பட்ட போது, கம்மாத்தி கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.கூடலுாரில் இருந்து புத்துார்வயல் மற்றும் ஸ்ரீமதுரை கிராமங்கள் வழியாக, பாலம்வயல் பகுதிக்கு பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை ஏற்று, கூடலுாரில் இருந்து புத்துார் வயல், கம்மாத்தி, குங்கூமூலா வழியாக பாலம் வயலுக்கு புதிய வழித்தடத்தில் மினிபஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கம்மாத்தி கிராம மக்கள், கம்மாத்தி பகுதியில் ஒன்றாக கூடி, மினி பஸ்சை வரவேற்று மாலை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.கிராம மக்கள் கூறுகையில், 'நீண்ட காலமாக இவ்வழியாக, மினி இயக்க வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மினி பஸ் இயக்க துவங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மினி பஸ் குறித்த நேரத்தில் தடை இன்றி இயக்க வேண்டும்,' என்றனர்.