புதிய கழிப்பிட கட்டடம்; பழங்குடியின பள்ளிக்கு உதவி
குன்னுார் : குன்னுார் யானை பள்ளம் பழங்குடியின கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு அறக்கட்டளை சார்பில், புதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும் முறையாக நிதி சென்றடையாமல் முழு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இதேபோல, உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட யானைபள்ளம் பழங்குடியின கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்ததால், மாணவ, மாணவியர் சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள தமீம் அறக்கட்டளை சார்பில், 89 ஆயிரம் ரூபாய் செலவில், இரு கழிப்பிட கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதனை திறந்து வைக்கப்பட்டதுடன், மாணவ, மாணவியருக்கு சீருடைகளை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார், குன்னுார் சமூக சேவகர் முபாரக் ஊர் மக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.