| ADDED : அக் 03, 2011 11:38 PM
ஊட்டி : ' நம் நாட்டியின் இயற்கையான கோவில் காடுகளால் தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டு, பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருந்துள்ளன,' என கானுயிர் வார விழாவில் தெரிவிக்கப்பட்டது.நீலகிரி உயிர்சூழல் காப்பகத்தின் 25ம் ஆண்டு துவக்கம்; கானுயிர் வார விழா ஆகிய விழாக்களை, ஊட்டி அரசு கலை கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறை; சி.பி.ஆர்.,சுற்றுச்சூழல் கல்வி மையம்;' நெஸ்ட்' அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தின. டாக்டர்.மோகன கிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர்.ஜெயபிரகாஷ் விழா வை துவக்கி வைத்தார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் கள அலுவலர் குமாரவேலு விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டேன்டீ மேலாண்மை இணை இயக்குனர் டாக்டர். ராஜிவ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில்,'' நமது வாழ்வாதாரமான நீர், நிலம் காற்று போன்றவை மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக தாவர இனங்கள், வன விலங்குகளும் அதிகளவு பாதிப்படைகின்றன. வெளி நாட்டு தாவர இனங்கள் நீலகிரி உயிர் சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் சவாலாக உள்ளது. இதனை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.நீலகிரி தெற்கு வனகோட்ட மாவட்ட வன அலுவலர் அனுராக்மிஸ்ரா பேசுகையில்,'' நீண்ட நெடிய கலாச்சார பாரம்பரியம் கொண்ட இந்தியா, இயற்கை பாதுகாப்பதில் முன்னோடியாக இருந்துள்ளது. நம் நாட்டின் உள்ள இயற்கையான கோவில் காடுகளால் தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டு, பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குப்பைகளை வனங்களில் இட்டு செல்வது புல்வெளி வனப்பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது,'' என்றார்.தொடர்ந்து,'நெஸ்ட்' அறங்காவலர் சிவதாஸ்,தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன், தமிழ்துறை தலைவர் டாக்டர்.அழகர் ராமனுஜம் உட்பட பலர், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். மாணவி இலக்கியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில், 300க்கும் மேற்பட்ட விலங்கு உயிரியல் மற்றும் தாவரவியல் மாணவ, மாணவியர், அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். டாக்டர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.