கடன் செலுத்திய பின்னரும் நோட்டீஸ்
பந்தலுார்; பந்தலுார் இந்திரா நகர் பகுதியில் உள்ள 'மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பின்னரும் 'நோட்டீஸ்' வந்ததால், அதிர்ச்சி அடைந்த பயனாளிகள், போலீசில் புகார் அளித்து, நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அதில், விஜயலட்சுமி, மீனாட்சி, சாந்தி ஆகியோர் கூறுகையில், ''கொளப்பள்ளியை சேர்ந்த நாங்கள் இந்த நிதி நிறுவனத்தில் கடந்த, 2023 ஆம் ஆண்டு பிப்., மாதம், 25ம் தேதி தலா, 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தோம். கடனை முழுமையாக செலுத்தி பின், கடந்த பிப்., 12-ம் தேதி கடன் அடைக்கப்பட்டதற்கான அட்டையில் கடன் வசூலிக்க வரும் பணியாளர் கையெழுத்திட்டு தந்தார். இந்நிலையில், தற்போது கடன் நிலுவை உள்ளதாத நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்துவதாக கூறியும் தீர்வு ஏற்படவில்லை,'' என்றனர். வங்கி மேலாளர் அஜீஸ் கூறுகையில்,''கடன் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டவர், இவர்களிடம் பெற்ற கடன் தொகையை வங்கியில் வரவு வைக்கவில்லை. தொகையை பெற்ற பின்னர் தீர்வு காணப்படும்,'' என்றார். இதை தொடர்ந்து, மகளிர் குழுவினர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,யை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.