ஒருவர் உயிரிழப்பு :மூவரை கைது செய்த போலீசார்
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்திய தங்க சுரங்கங்கள் உள்ளன. இதனை ஒட்டி தற்போது நுாற்றுக்கணக்கான பேர் தனியாக சுரங்கப்பாதைகள் அமைத்து, 'டெட்டனேட்டர்' பயன்படுத்தி, சிறு பாறைகளை உடைத்து, குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, தங்க மண் படிமங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இப்பணியின் போது, சுரங்கங்களில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும் வனத்துறையினரின் தடையை மீறி பலரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவாலா பிலாமூலை பகுதியை சேர்ந்த கணேசன்,43, என்பவர் உயிரிழந்துள்ளார். இவர், தங்க மண் படிமங்கள் எடுக்க சென்ற போது குழியில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. அவருடன் இதே பணியில் ஈடுபட்டு, இறந்தவர் உடலை மூவர் மீட்டு வந்துள்ளனர். இது தொடர்பான தகவலின் பேரில், விவேகானந்தன், 41, பார்த்தீபன், 27, தேவாலா அட்டியை சேர்ந்த மேத்யூ,49, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். அத்துமீறி வனத்திற்குள் சென்று, தங்க மண் துகள் படிமங்கள் எடுத்ததாக வனத்துறை சார்பிலும், மூவர் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறையினர் கூறுகையில்,'தங்க படிமங்கள் எடுப்பதற்காக அத்துமீறி வனத்திற்குள் செல்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர். -