உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடர் மண்சரிவு, உருண்டு விழும் பாறைகள் ஊட்டி மலை ரயில்கள் ரத்து

தொடர் மண்சரிவு, உருண்டு விழும் பாறைகள் ஊட்டி மலை ரயில்கள் ரத்து

குன்னுார்: குன்னுாரில் இரவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மலை ரயில் பாதையில், பாறைகள் விழுந்ததுடன், மிகப்பெரிய அளவில் மண் சரிவும் ஏற்பட்டதால் அனைத்து மலை ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம், குன்னுாரில் இரவு நேரத்தில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ஆடர்லி அருகே 18ம் தேதி இரவில், மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும் விழுந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவில், ஹில் குரோவ் அருகே ராட்சத பாறை விழுந்தது; ரன்னிமேடு, கிளண்டேல் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால் இரண்டாவது நாளாக நேற்றும் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. குன்னுார் - ஊட்டி பாதையில், வெலிங்டன் அருகே 28வது கி.மீ.. பகுதியில் மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுவதும் மூடப்பட்டதால், ஊட்டி குன்னுார் இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயிலும் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே பொது பணித்துறை ஊழியர்கள், சிறிய பொக்லின் வரவழைத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 30வது கி.மீ., பகுதியில் ராட்சத மரம் விழுந்ததை ரயில்வே ஊழியர்கள் வெட்டி அகற்றினர். தீபாவளி விடுமுறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மழையின் தாக்கம் இரவு நேரத்தில் தொடர்வதால் ஆங்காங்கே மண் சரிவு, பாறைகள் விழுவது மரங்கள் விழுவது என நீடிக்கிறது. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மீண்டும் பாதிப்புகள் இல்லை எனில் நாளை (இன்று) இயக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ