ஊட்டி நகராட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஆய்வுக்கு பின் விரைவாக முடிக்க உத்தரவு
ஊட்டி : ஊட்டி நகராட்சியில், 70 சதவீதம் வளர்ச்சி பணிகள் முடிக்காமல் உள்ளதால், வார்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். வார்டுகளில், 'கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்; 15வது நிதி குழு சிறப்பு நிதி; பொது நிதி; மாநில நிதி குழு திட்டம்; எம்.பி., எம்.எல்.ஏ., நிதி; சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்,' என, பல்வேறு திட்டங்களின் கீழ், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி நகர் பகுதியில் முக்கிய திட்டங்களின் கீழ், 2022 முதல் 2024ம் ஆண்டு வரை, 35 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளில் தாமதம்
கடந்த மூன்றாண்டு கால கட்டத்தில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட மாற்றங்கள்; குளறுபடி; மன்ற உறுப்பினர்களுக்கும்; அதிகாரிகளுக்கும் இடையே நிலவும் 'பனிபோர்'உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வளர்ச்சி பணிகள் தொய்வு நிலையில் உள்ளது. மாதாந்திர மன்ற கூட்டங்களில் மன்ற உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து தெரிவித்தாலும், நகராட்சி நிர்வாகம் பெயரளவுக்கு ஆய்வுக்கு சென்று திரும்புவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிரச்னைகளால் வார்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 70 சதவீதம் பணிகள் பாதிப்பு
மேலும், வார்டுகளில் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு துவக்கப்பட்ட வளர்ச்சி பணிகளில், 30 சதவீதம் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளது. 70 சதவீதம் பணிகள் முடிக்காமல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவல் நகராட்சி மேலதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, 'ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,'' நான் பதவி ஏற்ற பின்பு, சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி, ஊட்டி நகராட்சி வார்டு பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளில், 70 சதவீத பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் தாமதமாக நடந்து வருகிறது. அதில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள்; அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.