உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீர்ப்பிடிப்பு பகுதியில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு! தீர்வு இல்லையெனில் போராட்டம் நடத்த முடிவு

நீர்ப்பிடிப்பு பகுதியில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு! தீர்வு இல்லையெனில் போராட்டம் நடத்த முடிவு

குன்னுார்: குன்னுாரில். 'சதுப்புநிலம், நீர்ப்பிடிப்பு நிலம்' என, வகைப்படுத்தப்பட்ட, பந்துமை பகுதியில் 'டைடல் பார்க்', அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குன்னுார் எடப்பள்ளி, பந்துமை பகுதியில், குறிஞ்சி செடிகள், மூலிகை செடிகள், சோலை மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, அரசு அதிகாரிகள் நீதிபதிகளை அழைத்து வந்த போது, 'மரங்கள் மற்றும் இயற்கை வளங்களை அழிக்க கூடாது,' என கூறி, அரசு திட்டங்களை செயல்படுத்த தடை விதித்து சென்றனர். டெண்டர் கோர திட்டம் இந்நிலையில், இங்குள்ள நீராதார பகுதியில், 'டைடல் பார்க்', அரசு கலை கல்லுாரி உள்ளிட்ட அரசு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், டைடல் பார்க் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், நாளை நடக்கும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதில், புலஎண், 3ல், டைடல் பார்க்; அரை ஏக்கரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு பணியாளர்களுக்கு குடியிருப்புகள்; ஒரு ஏக்கரில் கூடுதல் கலெக்டர் குடியிருப்பு, முகாம் அலுவலகம் அமைக்க ஒப்புதல் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே புலஎண்ணில் உள்ள நிலமானது, குன்னுார் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிலமாகவும் உள்ளது. குன்னுார் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர உள்ளதால், நகரின் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை முழுமை படுத்த, ரேலியா அணை மற்றும் பந்துமை நீராதாரம் உள்ள பகுதியில், 50 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை மற்றும் சேமிப்பு தொட்டி உட்பட இதர பணி நடத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கிராம ஆவண பதிவில் சதுப்பு நிலம் மேலும், கிராம ஆவண பதிவேட்டில், 'சதுப்புநிலம், நீர்நிலை ஆதாரம்' என அந்த இடம் வகை படுத்தப்பட்டு உள்ளதால், மாற்று கட்டடங்கள் பயன்படுத்த முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இடம் நகராட்சி சொந்தமான நிலம் என்பதால், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அனுமதி கோரப்பட்டு, மன்ற அனுமதிக்காக வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சர்ச்சை எழுந்துள்ளது. நீலகிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி மனோகரன் கூறுகையில்,''வன பாதுகாப்பு சட்டத்தின் படி, சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான 'ராம்சார்' ஒப்பந்ததிலும், ஈர நிலங்கள் எனும் சதுப்புநிலங்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், சதுப்புநிலம், நீராதாரங்கள் நிறைந்த பந்துமை நீர்பிடிப்பு பகுதியில் செயல்படுத்த உள்ள கட்டுமானம் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்,'' என்றார். குன்னுார் நகர பா.ஜ., தலைவர் பாலாஜி கூறுகையில், ''நீராதார பகுதியில் டைடல் பார்க் அமைக்க எதன் அடிப்படையில் நகராட்சி அனுமதி கொடுக்க உள்ளது என்பது தெரியவில்லை. எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் வந்த பிறகு, மற்ற குடிநீர் திட்டங்களை நகராட்சி கைவிட்டு வருவது, எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொட்பாக, கலெக்டர், கமிஷனர், மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்படும், தவறும் பட்சத்தில், குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம், பொதுநல வழக்கு தொடரப்படும்,'' என்றார். கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''குன்னுார் பந்துமை பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை