இயந்திரத்தில் நெல் அறுவடை பணி விறு விறு
கூடலுார்; கூடலுார் பகுதி விவசாயிகள் வயல்களில், பயிரிட்டுள்ள நெற்பயிர் முதிர்ச்சி அடைந்தது தொடர்ந்து, கம்மாத்தி பகுதியில், இரண்டு வாரங்களுக்கு முன் பழங்குடி பெண்கள் நெல் அறுவடை செய்தனர். ஆனால், புத்துார்வயல், குணில், அள்ளூர்வயல், கம்மாத்தி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால் நெல் அறுவடை செய்வதற்காக, கடந்த வாரம், வெளியூரிலிருந்து இயந்திரம் கொண்டுவரப்பட்டது.ஆனால், கடந்த வாரம் பெய்து வந்த சாரல் மழையினால், வயல்களில் ஈரத்தன்மை ; அதிகரித்து, நெல் அறுவடை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை இன்றி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வயல்களில் ஈரத்தன்மை குறைந்தது. தொடர்ந்து, மண்வயல் புத்துார்வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் விவசாயிகள் நெல் அறுவடை பணியை நேற்று துவங்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில்,'நெல் அறுவடைக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காததால், கடந்த சில ஆண்டுகளாக வெளியூர்களில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதன் வாடகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, அரசு, தோட்டக்கலை மூலம் குறைந்த விலையில் நெல் அறுவடை செய்வதற்கான இயந்திரத்தை வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.