உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை சீரமைப்பில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

சாலை சீரமைப்பில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

பந்தலூர்: சாலை சீரமைப்பில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பந்தலூர், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தால், பூச்சக்கல் கிராமங்களில் பழங்குடியின மக்கள், வயநாடன் செட்டி, கவுடர்கள், தாயகம் திரும்பிய மக்கள் என 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மண் சாலையால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். சாலையை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. ஆங்காங்கே பெயர்ந்து, வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையில் இரண்டு பக்கமும் வனப்பகுதியாக இருப்பதால் வன விலங்கு தொல்லை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை மக்கள் தலை சுமையாக கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைப்புக்கு அதிகாரிகள் செவி சாய்க்காததால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கண்டித்து கிராம நுழைவாயில் பகுதியில் பதாகைகள் வைத்துள்ளனர். ஓட்டு கேட்டு தங்கள் கிராமத்திற்குள் வரக்கூடாது என எச்சரித்துள்ளனர். கிராம ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் கூறுகையில், 'சாலை பழுதால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம், மாவட்ட கலெக்டர் வரை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்து செல்கின்றனர். தேர்தல் முடிந்ததும் எங்களை மறந்து விடுகின்றனர். சாலையை சீரமைத்து தரும் வரை, கிராம மக்கள் யாரும் ஓட்டு போட போவதில்லை என்று தீர்மானித்துள்ளோம். அதையும் மீறி தேர்தல் நேரத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்தால் அவர்களை கிராம மக்கள் இணைந்து சிறை பிடிப்போம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை கருப்பு கொடிகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை